மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகளைக் கண்டித்தும், நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமும் கதவடைப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இப்போராட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு இன்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தின் நோக்கங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையில் தொடரும் ஆக்கிரமிப்புகள், மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்படுதல், பண்ணையாளர்கள் மீதான வன்முறைகள் மற்றும் கால்நடைகள் கொல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் கவலைக்குரியவை என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
தலைமுறை தலைமுறையாகக் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு மேய்ச்சல் நிலங்களின் உரிய பயன்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துதல், மேய்ச்சல் நிலங்களுக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுதல், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தல், கால்நடைகள் கொல்லப்படுவது தொடர்பில் சுதந்திரமான விசாரணை நடத்துதல் மற்றும் பண்ணையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டம் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் மட்டுமன்றி, நில உரிமை, மனித உரிமைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நவம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

