ஏறாவூரில் பொது சுகாதார பரிசோதகரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!

ஏறாவூரில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரைப் பழிவாங்கும் நோக்கில், அவர் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும், ஏறாவூர் 6ஆம் பிரிவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கலடி பொது சுகாதார அலுவலகத்தின் கீழ் ஏறாவூர் 4ஆம் பிரிவில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர், அப்பகுதியிலுள்ள உணவகங்களில் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இதன்போது, சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் ஒன்றுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த உணவக உரிமையாளர், பொது சுகாதார பரிசோதகரைப் போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்து பழிவாங்கும் நோக்கில் இருவருக்கு பணம் வழங்கி இந்தச் செயலில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, கடந்த 26ஆம் திகதி ஏறாவூர் 4ஆம் பிரிவு பாடசாலை வீதியிலுள்ள அவரது அலுவலகத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில், ஐஸ் போதைப்பொருள் அடங்கிய மூன்று சிறிய பொதிகளை சந்தேகநபர்கள் ஒட்டுமூலம் மறைத்து வைத்துள்ளனர்.

இதனை அவதானித்த பொது சுகாதார பரிசோதகர் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் பொதிகளைப் பரிசோதித்தபோது அவை ஐஸ் போதைப்பொருள் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கமரா காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. போதைப்பொருளைப் பெற்றுக்கொண்ட இடம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *