மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த கணவன் மனைவியான கொள்ளையர்கள் கொடுத்து மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட கல்லாற்றைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய கணபதிப்பிள்ளை விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மார்ச் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் இளம் தாயும், வயல் பகுதியில் இருந்து அவரது 3 வயது 4 மாத பெண் குழந்தையும் மீட்கப்பட்டனர்.
இதேவேளை, கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் பெண்ணொருவரின் சடலமும் மீட்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வவுணதீவு பாவற்கொடிச்சேனையைச் சேர்ந்த கணவன், மனைவியே இந்தக் குற்றச்செயல்களின் சூத்திரதாரிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில், வவுணதீவு பாவற்கொடிச்சேனைக்குச் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்த 65 வயதுடைய வயோதிபப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த கணவன், மனைவி அணுகியுள்ளனர்.
இதன்போது, அப்பகுதியில் களவுகள் அதிகம் இடம்பெறுவதாகவும், கழுத்திலுள்ள தங்கச் சங்கிலியைத் திருடர்கள் அறுத்துச் செல்லக்கூடும் எனவும் கூறி அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். பின்னர், நம்பிக்கையை ஏற்படுத்தி அவரிடம் நெருங்கியுள்ளனர்.
இதனையடுத்து, தனது கையிலிருந்த 2 பவுண் தங்கக் காப்பையும் கழுத்திலிருந்த 5 பவுண் தங்கச் சங்கிலியையும் கழற்றி கைப்பையில் வைத்துக்கொண்டுள்ளார்.
இதன்போது, குறித்த தம்பதியினர் நித்திரைக்காகப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் கலந்த குளிர்பானத்தை அவருக்கு வழங்கியுள்ளனர்.
அதனைப் பருகிய வயோதிபப் பெண் சிறிது நேரத்தில் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தையடுத்து சுமார் நான்கு மணித்தியாலங்களின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, இச்சம்பவத்தின் பின்னர் உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் ஏற்பட்டதுடன் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
எனவே அவருக்கு கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்து காரணமாக அவருக்கு இந்த நோய் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் .

