வாழைச்சேனை பொலிஸாரினால் போதைப் பொருட்களுடன் வெவ்வேறிடங்களில் ஐந்து போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரத்ன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைவஸ்த்து பாவனையை ஒழிக்கும் நோக்கில் வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜரூள் அவர்களின் ஆலோசனையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரத்னவின் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் நேற்றிரவு (சனிக்கிழமை) மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வாழைச்சேனை கோழிக்கடை வீதியைச்சேர்ந்த 31 வயதுடைய போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபரிடமிருந்து 2,340 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் காவத்தமுனை பிரதேசத்தைச்சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களிடமிருந்து தலா 65, 60 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் நாவலடி மற்றும் தியவாட்டவன் பிரதேசங்களைச் சேர்ந்த இரு இளைஞர்களிடமிருந்து முறையே 220, 250 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களான டிலங்காவெல, எம்.ஏ.எம்.அக்ரம், ராஜபக்ஷ, மற்றும் பொலிஸ் விஷேட பிரிவைச்சேர்ந்த எம்.பயாஸ் மற்றும் விஜிதரன் ஆகிய விஷேட குழுவினரே இப்போதைப்பொருள் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

