மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உரிமைகளை உறுதிப்படுத்தும் பிம்சவிய (நில சக்தி) காணி உரித்துப் பதிவு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இன்று (04) நடைபெற்றது.
1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க காணி உரித்துப் பதிவு சட்டத்தின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, காணிகளின் எல்லைகளை முறையாக அளவீடு செய்து, காணி உரிமையாளர்களுக்குச் சட்டபூர்வமான உரித்துச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் 177B தாமரைக்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தெளிவூட்டல்கள் இதன்போது வழங்கப்பட்டது.
காணி உரித்து நிர்ணயத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் திணைக்களம் ஆகியன இணைந்து அரச மற்றும் தனியார் காணிகளை அளவீடு செய்து, அவற்றுக்கான சட்டபூர்வமான உரித்துச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் காணி உரிமையை உறுதிப்படுத்துதல், மோசடியான காணி ஆவணப் பரிமாற்றங்களைத் தடுத்தல், காணி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் காணி நிர்வாகத்தை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றது.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், காணி உரித்து நிர்ணயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

