ஒரே மாதத்தில் 423.6 கோடி ரூபாயாக உயர்ந்த கடனட்டை நிலுவைக் கடன்!

இலங்கையின் வர்த்தக வங்கி கட்டமைப்பில் செயற்பாட்டிலுள்ள கடனட்டைகள் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொண்டு இதுவரை திருப்பிச் செலுத்தாத மொத்தக் கடன் தொகை, ஒரே மாதத்தில் 4,236 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அண்மைய நிதிக் குறிகாட்டிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த ஜூலை மாத இறுதியில் 209,189 மில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்த கடனட்டை நிலுவைக் கடன் தொகை, ஓகஸ்ட் மாத இறுதியில் 213,425 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.இதன்படி, ஒரு மாத காலப்பகுதிக்குள் நாட்டின் மொத்த கடனட்டை நிலுவைக் கடன் தொகை 4,236 மில்லியன் ரூபாவால், அதாவது 423.6 கோடி ரூபாவால் அதிகரித்துள்ளது.

பணவீக்கம் மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்காக அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் கடனட்டைகளை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளமை இந்த நிலைமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

அத்துடன், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் வர்த்தக வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு விலைக்கழிவுகள், சலுகைகள் மற்றும் இலகு தவணைக் கட்டணத் திட்டங்கள் காரணமாகவும் கடனட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் விளைவாக, நாட்டில் கடனட்டைகள் மூலம் பெறப்பட்டு இதுவரை திருப்பிச் செலுத்தப்படாத கடன் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக மத்திய வங்கியின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *