பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செங்காமம் மற்றும் ஆதிமுனைப் பகுதிகளில் பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்ரமாராச்சியுடன் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், குடியிருப்புகளில் தொடர்ந்து வாழவும் வனவளத் திணைக்களத்தின் நடவடிக்கைகளால் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
மக்களின் வாழ்வாதாரத்தையும் குடியிருப்பு உரிமைகளையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை செங்காமம் மற்றும் ஆதிமுனைப் பகுதிகளுக்கு நேரடி கள விஜயம் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுடன் விசேட கூட்டமொன்றை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசீத்துடனும் ஹரீஸ் கலந்துரையாடியுள்ளார்.

