அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக ஆண்டுக்கு 900 பில்லியன் ரூபாய் செலவு!

அரச ஊழியர்களின் சம்பள வழங்கலுக்காக மாத்திரம் தற்போது வருடமொன்றுக்கு சுமார் 900 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் 04 சேவைப் பிரிவுகளின் கீழ் 223 பேருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு நேற்று (14) உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட இந்த அனைத்துச் செலவுகளும் இந்நாட்டுப் பொதுமக்கள் செலுத்தும் வரி வருமானத்திலிருந்தே ஈடு செய்யப்படுகின்றன என்றார்.

எனவே, பொதுமக்களின் பணம் குறித்துச் சரியான புரிதலுடனும் பொறுப்புடனும் தமது கடமைகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு அரச ஊழியரதும் பொறுப்பாகும் என்பதையும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்த மாதம் முடிவடைவதற்கு முன்னர் ஆரம்ப நிலை சுகாதார அதிகாரிகள் 1,600 பேரையும் சுகாதார கட்டமைப்பிற்குள் இணைத்துக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், புதிய நியமனதாரர்களுக்கும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சம்பளத் திருத்தங்களின் பலன்கள் கிடைக்கப்பெறும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், ஜனவரி மாதத்தில் அடிப்படைச் சம்பள அதிகரிப்பும், ஜூலை மாதத்திலிருந்து கொடுப்பனவு அதிகரிப்பும் வழங்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *