சமுதாய ஒற்றுமைக் கிண்ணம் நாளை ஆரம்பம்!

சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்கும் ‘சமுதாய ஒற்றுமைக் கிண்ணம் – 2026’ மாபெரும் உதைபந்தாட்டத் தொடர் எதிர்வரும் நவம்பர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சமுதாய ஒற்றுமைக் கிண்ணத்தின் ஸ்தாபகரும், சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளருமான வெள்ளையன் வினோகாந்த் தலைமையில், அனுராதபுரம் கஸ்தூரி விளையாட்டுக் கழகம் மற்றும் Voice of Future – Sri Lanka அமைப்பு ஆகியன இணைந்து இத்தொடரை ஏற்பாடு செய்துள்ளன.
இக்கிண்ணம் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில், அனுராதபுரம் கஸ்தூரி, பொலன்னறுவை நியூ பேர்ட்ஸ், மாத்தளை ஜொலி போய்ஸ், திருகோணமலை கிரீன் லைட், அம்பாறை வீனஸ் மற்றும் மட்டக்களப்பு கிரீன் லைட் ஆகிய ஆறு கழகங்கள் களமிறங்கவுள்ளன.
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இச்சமரில், பங்கேற்கும் அணிகள் கிண்ணத்தைக் கைப்பற்றும் நோக்கில் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால், கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிகழ்வுக்கு சிலோன் பெட்டிஸ் காலேஜ் ஸ்ரீலங்கா பிரதான அனுசரணை வழங்குவதுடன், சூரியன் FM ஊடக அனுசரணை வழங்குகின்றது. மாற்றத்திற்கான மாணவர்கள் அமைப்பு இணை ஏற்பாட்டாளராகச் செயற்படுகின்றது.
மேலும், துளிர் அமைப்பு, நாவலர் சன சமூக நிலையம், உதவும் கரங்கள் அமைப்பு, நிழலாய் நிற்போம் அமைப்பு, ஐக்கிய கால்நடை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம், நண்பர்கள் ஒன்றியம், வீனஸ் விளையாட்டுக் கழகம், அறம் அமைப்பு, கிரேஸ் பாலர் பாடசாலை மற்றும் வாரணம் நற்பணி மன்றம் ஆகியன உதவிப் பங்களிப்புகளை வழங்குகின்றன.
காலை 7.30 மணி முதல் நடைபெறவுள்ள இப்போட்டிகளைக் கண்டுகளிக்க விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்பதால், பெருமளவில் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *