காத்தான்குடியில் கழிவு மறுசுழற்சி நிலையம் திறப்பு!

சுத்தமானதும் பசுமையானதுமான காத்தான்குடி நகரை உருவாக்கும் நோக்கில், க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட திண்மக்கழிவு தரம்பிரிப்பு மற்றும் மீள்சுழற்சி இயந்திரப் பிரிவு நிலையம் நேற்று  (26) பிற்பகல் காத்தான்குடியில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையில் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் கீழ் இவ்வாறான இயந்திரத் தொகுதியுடன் கூடிய நிலையம் முதன்முறையாக காத்தான்குடியில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் இயந்திரங்களை நிறுவும் பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மக்களின் பயன்பாட்டிற்காக காத்தான்குடி நகர சபையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில், நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிலையத்தைத் திறந்து வைத்தார்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் பொறுப்பாளரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான எஸ்.பி.சி. சுகீஸ்வர, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் மற்றும் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளரும் க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான எம்.பீ.எம். பிர்தௌஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதியின் வருகையைத் தொடர்ந்து நிலையத்தின் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், இயந்திரப் பிரிவும் ரிப்பன் வெட்டி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து, திண்மக்கழிவுகளைத் தரம்பிரித்து மீள்சுழற்சி செய்யும் இயந்திரங்களின் செயற்பாடுகளை அமைச்சர் பார்வையிட்டார்.

இதேவேளை, காத்தான்குடி கடற்கரைப் பகுதியைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் காத்தான்குடி நகர சபைக்கு வழங்கப்பட்ட சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு கடற்கரைத் துப்புரவு இயந்திரங்களும் ஒரு உழவு இயந்திரமும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியினால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

தொடர்ந்து, காத்தான்குடி கடற்கரையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில், நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக வருகை தந்த அமைச்சரை நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

இந்நிகழ்வில் மாகாண திணைக்கள அதிகாரிகள், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத், பொலிஸ் அதிகாரிகள், க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய மற்றும் மாவட்ட வேலைத்திட்ட அதிகாரிகள், நகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி நகரின் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை நவீனமயப்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நகரின் தூய்மையையும் மேம்படுத்துவதற்கு இந்நிலையம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.of

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *