கோப் குழுவின் முன்னிலைக்கு பல அரச நிறுவனங்கள்!

அரசாங்க நிறுவனங்கள் பலவற்றின் செயற்பாடுகள் எதிர்வரும் ஆண்டில் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனப் பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் (கோப் – COPE) தலைவர் வைத்தியர் நிசாந்த சமரவீர தெரிவித்தார்.

பரிசோதிக்க எதிர்பார்க்கப்படும் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அந்த நிறுவனங்களின் தலைவர்களை அழைத்து, அவற்றில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விரிவாகக் கேட்டறியவும் குழு எதிர்பார்த்துள்ளது.

கோப் குழு இந்த ஆண்டிலும் முப்பதுக்கும் மேற்பட்ட அரசாங்க நிறுவனங்களை அழைத்து, அவற்றின் ஊழல் ,மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தியது.

இதற்கிடையில், கோப் குழுவின் செயற்பாடுகளைச் செயற்திறன் மிக்கதாக மாற்றுவதற்காக அதன் பணிகள் பல உப குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் மூலமும் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கோப் குழுவின் பல விசாரணை அறிக்கைகள் மேலதிக விசாரணைகளுக்காக இலஞ்ச ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இலஞ்ச ஆணைக்குழு இது தொடர்பாக ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *