பல அரச நிறுவனங்களில் நாளை (30) முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்துக்குத் தபால் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை வழங்கவுள்ளதாகக் கூட்டுத் தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தபால் திணைக்களம் இந்தப் பணிப்புறக்கணிப்பில் நேரடியாக இணைந்து கொள்ளுமா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை எனக் கூட்டுத் தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அமைப்பாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய வரவு – செலவுத் திட்டத்தில் அரச சேவை ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடித்த அணுகுமுறையே தற்போதைய நிலைமைக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் உயர்ந்து வரும் சேவைக் கட்டணங்களைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச சேவை ஊழியர்களுக்கும் 25,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மீதான கருத்துக்களைச் சமர்ப்பித்த போது தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாக சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
ஆனால், முழு அரச சேவைக்கும் அந்தக் கொடுப்பனவை வழங்குவதற்குப் பதிலாக, தெரிவு செய்யப்பட்ட சில குழுக்களுக்கு மாத்திரம் பல்வேறு கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் அரச சேவைக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதுடன், சில அரச துறைச் சேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரச சேவையின் தங்குதடையற்ற செயற்பாட்டைப் பேணுவதில் அனைத்து ஊழியர்களும் முக்கியப் பங்காற்றுவதால், அவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் கருத்திற்கொண்டு தேவையான நிவாரணங்களையும் கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தொழிற்சங்க உரிமைகளுக்காகப் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படமாட்டாது என அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட கருத்துக்கள் ஜனநாயக ஆட்சிமுறைக் கோட்பாடுகளுக்கு முரணானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட அனைத்துத் தபால் ஊழியர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட சிந்தக பண்டார, அரச சேவை ஊழியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு மேலதிகமாக, தபால் திணைக்களம் தொடர்பான பிரச்சினைகளுக்காகவும் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

