யானையின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தக் கோரி சடலத்துடன் மக்கள் போராட்டம்

வவுனியா கண்னாட்டி கணேசபுரம் கிராமத்தில் யானையின் அட்டகாசத்தினை கட்டுப்படுத்தக் கோரியும் யானை தாக்கி உயிரிழந்தவருக்கு நீதி கோரியும் அப்பகுதி மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(21) மதியம் முன்னெடுக்கப்பட்டது.

 

வவுனியா கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நேற்றுமுன்தினம்(19) ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

நேற்றுமுன்தினம் இரவு அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதிக்கரையில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதுடன் சம்பவத்தில் கண்னாட்டி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை இன்று அவரது கிராமத்தில் இடம்பெற்ற சமயத்தில் சடலத்துடன் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இறக்கிய யானைகளை ஏற்றி அனுப்பு , உயிரை பாதுகாக்க வழி சொல், விவசாயத்தினை காப்பாற்று, அரசே காட்டு யானைக்கு ஒரு வழி சொல் போன்ற பல்வேறு வசனங்களைத் தாங்கிய பாதாதைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்பில் ஈடுபட்டமையுடன் மாலை 5மணிக்கே கிராமத்தினுள் காட்டுயானை வருவதுடன் தமது விவசாய நிலங்களை சேதமாக்குவதாகவும் , வீதியோரங்களில் நின்று பொதுமக்களை தாக்குவதினால் மாலை 5மணிக்கு பின்னர் வெளியே செல்ல முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.

 

முன்னைய காலத்தில் எமது கிராமத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் தற்போது வேறுபகுதிகளிலிருந்து காட்டுயானைகளை எமது கிராம எல்லைப்பகுதிகளில் விடுவதினாலேயே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் இதற்கு நிரந்த தீர்வு கோரியும் யானை தாக்கி உயிரிழந்தவருக்கு நீதி வழங்க கோரிக்கை விடுப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *