ஆசிரியர் மற்றும் அதிபர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயம்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்த் தெரிவிக்க அவரின் வீட்டுக்குச் சென்ற ஆசிரியர் மற்றும் அதிபர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்ட ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று(23) மாலை இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று தம்பட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெறவுள்ளதற்கு செல்வதற்கு மாணவர்களை ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு முன்னாள் ஒன்று கூடுமாறு அதிபரின் உத்தரவுக்கமைய மாணவர்களின் வீட்டிற்குச் சென்று அறிவிப்பதற்காக சம்பவதினத்தன்று குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவிக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முற்பட்டார். இதன்போது  வீட்டில் சத்தம் கேட்ட நிலையில் வீட்டில் இருந்து வெளியில் வந்த மாணவியின் சகோதரன் ஆசிரியரை வாளால் வெட்டித் தாக்கியதுடன் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்ததையடுத்து அசிரியர் தனக்கு நேர்ந்த கதியை அதிபருக்கு தெரிவித்ததையடுத்து அதிபர் அங்கு சென்று ஆசிரியரைக் காப்பாற்ற முற்பட்டபோது அவர் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தியதுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்தான்.

இதனையடுத்து வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியர், அதிபர் ஆகிய இருவரையும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொண்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *