மட்டக்களப்பு வவுணதீவில் குடி தண்ணீர் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டுக்காரன் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று(02) மாலை இடம்பெற்றது.
துப்பாகிப்பிரயோகம் மேற்கொண்டவரை கைது செய்துள்ளதுடன் துப்பாகிக் ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னங்குடா பாடசாலை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய பாக்கியராசா சதீஸ்கரன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
இதுபற்றி தெரியவருவதாவது
இச்சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவரின்; வீட்டுக்கு அருகிலுள்ள அவரது சகோதரனின் காணியில் குடிநீருக்காக தேசிய நீர்வழங்கல் சபையினால் குடிநீரை பெற்றுள்ள பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவரும் பாவித்துவந்த நிலையில் அதற்கான பணத்தை செலுத்தாத நிலையில் நீர் வழங்கல் சபையினால் குடிநீரை துண்டித்தனர்.
இது தொடர்பாக குடிநீரை பாவித்து வந்த பக்கத்து வீட்டுக்காரனிடம் தண்ணீரை பாவித்து விட்டு ஏன் அதற்கான பணத்தை செலுத்தவில்லை என கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சம்பவதினமான இன்று பிற்பகல் 4.30 மணிக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினால் பக்கத்து வீட்டுக்காரன் மீது துப்பாகிப்பிரயோகம் மேற்கொண்டதில் கால் துடையில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட சின்னவன் என அழைக்கப்படும் அருளானந்தம் யோகேஸ்வரன் என்பவரை கைது செய்ததுடன் துப்பாகி ஒன்றையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

