சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தக் கோரிக்கை  

அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் மனித உடலங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தக்கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான கட்டளை நாளை மறுதினம்(06) வழங்கப்படவுள்ளது.

 

செம்மணி – சித்துபாத்தி இந்து மயான பகுதியில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

சித்துப்பாத்தி தொடர்பான வழக்கில் இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் நாள் அகழ்வு பணி நேற்று(03) முன்னெடுக்கப்பட்டது.

 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி. எஸ். நிரைஞ்சன், சித்துப்பாத்தியின் குற்றப் பிரதேசத்தை மனிதப் புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சார்பில் விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளோம்.

 

குறித்த விடயம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அபிப்பிராயத்தையும் யாழ்ப்பாண பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பிலும் அறிக்கையை தருமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

அது சம்பந்தமான கட்டளை ஆறாம் திகதி வழங்கப்படும். அதுவரைக்கும் இந்த அகழ்வாய்வு பணி நடைபெறும்.

 

ஏற்கனவே ஒரு மண்டையோட்டு தொகுதி பூரணமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது மண்டையோட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *