மட்டக்களப்பில் மாபெரும் விவசாயக் கண்காட்சியானது மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அதன் பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கல்) எம். பரமேஸ்வரன் தலைமையில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இன்று(04) இடம்பெற்றது.
இக் கண்காட்சியில் நவீன தொழில்நுட்பத்துடன் காலநிலைக்கு சாதகமான பாதுகாப்புக் கூடாரத்தில் பயிர்ச் செய்கைத் தொகுதி,
நகர்ப்புற மாடித்தோட்ட பயிர்ச் செய்கை தொகுதி, மரக்கறி, இலைமரக்கறி, கிழங்கு பயிர்கள், மூலிகை தாவரங்கள், பந்தல்களில் பயிர்ச் செய்கை தொகுதி, பண்ணை பெண்கள் விரிவாக்கல் தொகுதி, காளான் செய்கை மற்றும் தேனீ வளர்ப்புத் தொகுதி, நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் – பத்தலகொட, கிழக்கு பல்கலைக்கழகம், பண்ணை இயந்திரமயமாக்கல் பிரிவு மகா இலுபள்ளம மற்றும் பல நிறுவனங்களது காட்சிக்கூடாரங்களை அமைத்து காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் கால் நடை உற்பத்தி மற்றும் சுகாதாரம், தெங்கு, பனை அபிவிருத்திச் சபைகள், மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் மற்றும் பல திணைக்களங்களதும், தனியார் நிறுவனங்களதும் காட்சிக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருந்திரளான மாணவர்கள் மற்றும் மக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் டபள்யு. ஜி. திசாநாயக்கா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
மாவட்ட கமநல சேவை திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ். ஜெகநாத், விவசாயத் திணைக்களத்தின் மாவட்ட உயர் அதிகாரிகள், ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



