ஒட்டுசுட்டானில் சுகாதாரப் பரிசோதனை; நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கைப்பற்றல்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகள் மீது நேற்று(13) திடீர் சுகாதாரப் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனை ஒட்டுசுட்டான் மற்றும் முத்தையன்கட்டு பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டது.

சோதனை நடவடிக்கையின் போது, சில கடைகளில் மனித நுகர்விற்கு முற்றிலும் பொருத்தமற்ற மற்றும் புழுப்பிடித்த நிலையில் உள்ள 46 கிலோகிராம் கோதுமை மாவும், 20 கிலோகிராம் வண்டுகள் காணப்பட்ட பருப்பும் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கை ஒட்டுசுட்டான் வைத்தியர்களான பகீரதன் மற்றும் சஞ்சீவன் தலைமையில், முத்தையன்கட்டு பொதுச் சுகாதார பரிசோதகர் லோஜிதன் மற்றும் ஒட்டுசுட்டான் பரிசோதகர் டிலக்சன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்ததாவது,

உணவுப் பொருட்கள் சுத்தமும் தரமும் உத்திரவாதமிக்கவையாக இருக்க வேண்டும். விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள் ஆகியோர் பொருளின் தரத்தை உறுதி செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும்.

தரமற்ற மற்றும் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *