இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர்- வட மாகாண ஆளுநர் இடையில் சந்திப்பு

யாழ்ப்பாணத்தின் வலி வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்கிற்கு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஆளுநர் செயலகத்தில் இன்று(18) வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் இந்தச் சந்திப்பின்போது ஆளுநரிடம் குறிப்பிட்டதுடன், முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் வினவினார்.

வடக்கில் அமையப்பெறவுள்ள மூன்று முதலீட்டு வலயங்களினதும் உட்கட்டுமான அபிவிருத்திற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் தெரிவித்தார். வேலைவாய்ப்புக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அவை அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் இங்கு அதிகளவில் வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

இளையோரிடத்தில் புலம்பெயர்வுக்கான சிந்தனை மேலோங்கியிருக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொண்ட ஆளுநர், அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் இங்கே உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே முதலீட்டு வலயங்களை அமைக்கும் நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பிலும், விமான சேவை மற்றும் கப்பல் சேவைகள் தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *