சத்துருக்கொண்டான் கும்பிலாமடு வீதிக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு

கடந்த காலங்களில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென்று பல விடயங்களை எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்  என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

“கிராமிய பாதை அபிவிருத்தித் திட்டம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது இன்று(21) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் கும்பிலாமடு வீதியினை கொங்கிறீட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் வீதியின் ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கும் முகமாக வீதிக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க ஒத்துழைப்புடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டது.

615 மீற்றர் நீளம் கொண்ட இந்த வீதியானது 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூன்று மாத செயற்பட்டமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதி புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்ததுடன் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே. ஜே. முரளிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. சிவப்பிரியா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் பி. பரதன், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் திலகநாதன், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணித் தலைவியும் மாநகர சபை உறுப்பினருமான வனிதா, திணைக்கள அதிகாரிகள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *