தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நெல் விளைச்சலை மதிப்பீடு செய்தல் தொடர்பில் விவசாய போதனாசிரியர்களுக்கான செயலமர்வு இன்று(24) நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் எஸ். ஜெயவிந்தன் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தில் காலை 9.00மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து இங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த முக்கியமான வேலைத்திட்டமாக இது காணப்படுகிறது. இதன் ஊடாக பெறப்படும் அளவீட்டு நியம தரவுகள் மிகமிக முக்கியமானவை. ஏனெனில் அரசாங்கம் இதனை பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துகிறது.
எனவே இவை உண்மை, நடுநிலைமை மற்றும் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமையவேண்டும். கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய சரியான தரவை கொடுக்க வேண்டும். அத் தரவுக்களுக்கு பொறுப்புக்கூறுபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதன்போது நெல் விளைச்சலை மதிப்பீடு செய்வதற்கான அளவீடுகளைச் செய்யும் உத்தியோகத்தர்களுக்குரிய அறிவுறுத்தல்கள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் வி.சோதிலட்சுமி, கிளிநொச்சி மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


