கிண்ணியா நகர சபையின் மீன் சந்தை வருமானம் தனிப்பட்டவர்களினால் அபகரிப்பு – தவிசாளர்

கிண்ணியா நகர சபையின் மீன் சந்தை வருமானம் தனிப்பட்டவர்களினால் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.

கிண்ணியா நகர சபையில் இன்று(12)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கிண்ணியா நகர சபையானது புதிதாக அமையப்பெற்றதன் பின்னர் மக்களுக்கு பவ்வேறு
வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அவற்றை அடையாளப்படுத்தி செயற்படுத்துவதற்கும் அவற்றை நிறைவேற்றுவதற்கும் நிதிப் பற்றாக்குறை தடையாக இருக்கின்றது.

மேலும் வழமையான கழிவு அகற்றல், ஹோட்டல் கழிவுகளை அகற்றல், மின் குமிழ்களை பழுது பார்த்தல் போன்ற பணிகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் நகரசபையின் அனைத்து செயற்பாடுகளும் முடங்க வேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நிரந்தரமாக்கப்பட்ட ஊழியர்களுக்கான மொத்த சம்பளத்தையும். ஏனைய சபையின் நிரந்தர உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கான மொத்த மாதாந்த சம்பளத்தில் 20 வீத சம்பளத்தையும் சபையே வழங்க வேண்டுமென்ற புதிய நிர்பந்தமும்
இருக்கின்றது.

கிண்ணியா நகர சபைக்கு வருமானத்தை பெற்றுத் தருவதில் மீன் சந்தை குத்தகை பாரிய பங்களிப்பை செய்து கொண்டிருக்கின்றது.  நாளாந்தம் நாற்பது தொடக்கம் நாற்பத்து ஐயாயிரம் ரூபா வரையிலான வருமானத்தை பெற்றுத் தரக்கூடிய மீன் சந்தை குத்தகை வருமானம் 2025ம் ஆண்டின் ஜனவரி 01ம் திகதியிலிருந்து இது வரை ஒரு சதமேனும் கிடைக்கவில்லை.

குறித்த அந்த நகர சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானமானது தனிப்பட்ட சிலரினதும் மீனவ சங்கத்தினதும் கட்டுப்பாட்டின் கீழ் சட்டத்திற்கு முரணாக அவர்களால் வசூலிக்கப்படுகின்றது.

கிண்ணியா நகரசபைக்கு கிடைக்க வேண்டிய அந்தப் பணம் ஏனையோரின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன எனவும் தற்போதேனும் அவற்றுக்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்திவும் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *