பள்ளி வழிபாட்டாளர்களை வெளியேற்றியமைக்கு சவூதி அரேபியா கண்டனம்

பலஸ்தீனின் ஜெரூஸலத்திலுள்ள அல்- அக்ஸா பள்ளிவாசலுக்குள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் (Itamar Ben Gvir) நுழைந்து வழிபாட்டாளர்களை வெளியேற்றியமைக்கு சவூதி அரேபியா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

அல்-அக்ஸா பள்ளிவாசலில் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்புப் படையினருடன் நுழைந்து வழிபாட்டாளர்களை வெளியேற்றியுள்ளார். இது எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்நடவடிக்கையை சவூதி அரசு கடுமையாக கண்டிக்கின்றது.

அத்தோடு வடக்கு காசா பகுதியில் உள்ள ஜபாலியா முகாமில் உள்ள பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகவரகத்துடன் (UNRW) இணைந்த ஒரு மருத்துவமனையை இஸ்ரேலிய படையினர் இலக்கு வைத்து தாக்கியதற்கும் சவூதி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இஸ்ரேல் மீறுவதை கண்டிக்கும் சவூதி, ஜெருசலத்தின் வரலாற்று மற்றும் சட்ட அந்தஸ்து, அதன் புனிதங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து செயற்பாடுகளையும் திட்டவட்டமாக நிராகரிப்பதை உறுதிப்படுத்துகிறது.

இதுபோன்ற தீவிரமான மீறல்களைத் தடுக்கத் தவறினால், அது சமாதான வாய்ப்புகளை குறைக்கும், சர்வதேச சட்டங்களின் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்திவிடும். அத்தோடு பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைபேறு தன்மைகளுக்கு தீங்கு விளைவிக்கவும் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *