அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி கொள்கையை நடைமுறைப்படுத்தல் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.3 மாதங்களின் பின்னர் நாம் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். எனவே அரசாங்கம் இதனை ஒரு அவசர நிலைமையாக அறிவித்து, நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் புதிய வரி கொள்கையை நடைமுறைப்படுத்தல் மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 3 மாதங்களின் பின்னர் இந்த வரி முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேர்தலின் போது அமெரிக்க ஜனாதிபதி கூறிய விடயங்களை தற்போது நடைமுறைப்படுத்தாமலிருக்க முடியாது. இந்நிலையில் எமக்கு விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க வேண்டும். 25 – 30 சதவீத வரி செலுத்தப்பட்டாலும் அது எமக்கு பாரிய பிரச்சினையாகும்.
எமது வர்த்தகங்களில் இலாபத்துடன் ஒப்பிடுகையில் அந்தளவுக்கு வரி செலுத்த முடியாது. அது நஷ்டமாகவே காணப்படுகிறது. வரி அதிகரிக்கும் போது பொருட்களை கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைவடையும்.
எனவே இந்த பிரச்சினை முடிந்து விட்டதாக எம்மால் கருத முடியாது. எனவே இந்த 3 மாதங்களில் ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
வருமானம் குறைவடைவதால் நாம் கடன் பெறும் தொகையும் அதிகரிக்கும். இந்தக் காலாண்டில் 300 மில்லியன் டொலர்களை மீள செலுத்த வேண்டியுள்ளது.
மத்திய வங்கியிலிருந்து இந்த தொகையைப் பெற்றாலும் கடன் பெற்றாலும் அது ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது இந்த பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
2028இல் மீள செலுத்தப்பட வேண்டிய கடனை செலுத்த முடியுமா என்பது குறித்து மீள சிந்திக்க வேண்டும். கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி வேகத்தை 5 சதவீதம் வரை அதிகரிக்க முடிந்தது. எவ்வாறிருப்பினும் தற்போது இந்த பிரச்சினை காரணமாக இந்த பொருளாதார வளர்ச்சி வேகமானது வீழ்ச்சியடையக் கூடும்.

