இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – சந்திவெளி பிரதேசத்தில் நேற்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடந்த வாரமே திருமணபந்தத்தில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவர் காணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டுபேர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவதாவது,

சந்திவெளி பிரதேசத்தைச்சேர்ந்த (27) வயதுடைய வடிவேல் மோகன சாந்தன் என்பவரே உயிரிழந்தார்
சந்திவெளி  வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த இவரது சடலம் மீதான முதற்கட்ட விசாரணைகளை ஏறாவூர் திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நசிர் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
சந்திவெளி பொலிஸார் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விபத்தில் மரணமடைந்தவர் மத்திய கிழக்கு நாட்டில் வேலைசெய்துவிட்டு அண்மையில் நாடுதிரும்பி கோழிப்பண்ணை நடாத்திவந்தார். மாலை வேளையில் சந்திவெளி மைதானத்தில் விளையாடுவது இவரது வழக்கம்.

சம்பவதினம் இரவு அம்மைதானத்தில்  நடைபெறவிருந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுவந்த இளைஞர்களுக்கு சிற்றுண்டிகளை எடுப்பதற்காக பேக்கரி ஒன்றிற்கு வந்தவேளை எதிர்த்திசையில் மிகவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோது அந்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கத்தால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி தள்ளியதாக தெரிவிக்கப்படுகிறது.

வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிளில் மூன்றுபேர் பயணம் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது அதில் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஏனையவர்கள் தலைமறைவாகியிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர் இச்சம்பவத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *