முல்லைத்தீவு மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று(25) மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மு.ப.09.30 மணிக்கு நடைபெற்றது.
மாவட்டத்தில் நடைபெறுகின்ற விவசாய நடவடிக்கைகள், விவசாய விரிவாக்கல் திட்டங்கள், கால்நடை வளர்ப்பு, பெரும்போகச் செய்கை, நெல் கொள்வனவு சபையினால் நெல் கொள்வனவு தொடர்பான செயற்பாடு, நெல் களஞ்சியங்களின் பிரச்சினை மற்றும் தேவைப்பாடு, தானியப்பயிர்களின் அபிவிருத்தி, மாதுளைச் செய்கையின் நவீன முறையிலான உற்பத்தி மற்றும் சவால்கள், விவசாய உற்பத்தி சார் ஆய்வுகள் மேற்கொள்ளல் தொடர்பிலும், விவசாயத்தோடு சேர்ந்த தொழில் முயற்சியாண்மைக்கான கடன் தொடர்பிலும், நீர்ப்பாசன திணைக்களத்தினதும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினதும் குளம் மற்றும் அணைக்கட்டு புனர்நிர்மாண வேலைகளின் தற்போதைய நிலை தொடர்பிலும், தெங்கு பயிர்ச்செய்கை தொடர்பிலும் பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் சில தீர்மானங்களும் மேற்க்கொள்ளப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (நிர்வாகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.ஜெயகாந் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், வடமாகாண பிராந்திய விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் உதவிப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட விவசாயப் போதனாசிரியர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டத்தின் விவசாய அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *