திருகோணமலையில் தமிழ் செவிப்புலன் வலுவற்றோரின் தேசிய விழிப்புணர்வு நடைபவனி

சர்வதேச சைகை மொழி தினத்தையொட்டி, சைகை மொழி இல்லாமல் மனித உரிமை இல்லை என்ற தொனிப்பொருளில், தேசிய நடைபவனி ஒன்று நேற்று(26)
திருகோணமலை நகரில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபள்யூ. எச். எம். ஹேமந்தகுமார இதனை ஆரம்பித்து வைத்தார்.

திருகோணமலை செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து ஆரம்பித்த, இந்த நடைபவனி பிரதான வீதி ஊடாகச் சென்று, திருகோணமலை மாநகர சபை மண்டபத்தை அடைந்தது.

அங்கு இடம்பெற்ற விசேட
கலை நிகழ்வுகளிலும் அவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் செவிப்புலன் வலுவற்றோர் அமைப்பும், திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நடைபவனியில், வடக்கு கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து, நூற்றுக்கணக்கான செவிப்புலன் வலுவற்றோர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

சமூக சேவைகள் திணைக்களத்தின் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஒரு அங்கமாக சைகை மொழிகள் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நடைபவணியும் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வினை மாவட்ட அரசாங்க அதிபர் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது, இவ்வாறான ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தமைக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் இவ்வாறான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் மதிப்புக்குரியவர்கள் என்றும் இவர்கள் இவ்வாறு ஒன்று சேர்ந்து தங்களின் உரிமைகள் தொடர்பாகவும் தங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய நாட்களில் முக்கியமான தொன்றாக காணப்படுவதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *