காத்தான்குடியில் 11 வருடங்களாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல பெண் போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று(28) உத்தரவிட்டார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து காத்தான்குடி 6ம் பிரிவு ஜின்னா மாவத்தையிலுள்ள வீடு ஒன்றை கடந்த 22ம் திகதி பொலிஸார் முற்றுகையிட்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் வியாபாரியை 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்தனர்.
அவரை கைது செய்து விசாரணையை அடுத்து அவர் வழங்கிய தகவலுக்கு அமைய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 4 பேரை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட பெண் வியாபாரி கடந்த 11 வருடங்களாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இதுவரை அவர் இருந்த பொலிஸார் கைது செய்யவில்லை என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த பெண் வியாபாரியை நேற்று வரை 5 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணையை செய்ய நீதிமன்ற அனுமதி பெற்று தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 5 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

