அவதூறை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட வீடியோவை உடனடியாக அகற்றக் கோரி இடைக்கால தடையுத்தரவு

ஹட்டன் -பொய்யான தகவல்களை பரப்பி அவதூறை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட வீடியோவை உடனடியாக அகற்றக் கோரி இடைக்கால தடையுத்தரவு.

கடந்த 2025.09.25 அன்றைய தினம் வாடிக்கையாளர் ஒருவர் அட்டன் நகரில் உள்ள பேக்கரி எனும் வெதுப்பகத்துக்கு சென்று பாண் இறாத்தல் பொதியொன்றை வாங்கிச் சென்றதாகவும் பின்னர் அதனை பரிசோதித்தபோது அதில் “மனித விரலின் தோல் பகுதி ஒன்று காணப்பட்டதாகவும் அது தொடர்பாக 2025.09.26 அன்றைய தினம் குறித்த வாடிக்கையாளரால் அட்டன் நகரசபைக்குட்பட்ட பொது சுகாதார உத்தியோகத்தர் காரியாலயத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் குறித்த வியாபார நிலையத்திற்கு சென்ற பொது சுகாதார உத்தியோகத்தர்கள் அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

அதே நேரம் “ குறித்த வியாபார நிலையத்தில் விற்கப்பட்ட பாண் பொதியில் மனித விரலின் தோல் பகுதியொன்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக இதற்கு முன்னரும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு 1 நிமிடம் 13 செக்கன்கள் அடங்கிய வீடியோவொன்றை இணைய ஊடகம் ஒன்று தனது வலைத்தளத்தில் பதிவிட்டதோடு அந்த வீடியோவில் குறித்த வெதுப்பகத்தின் பெயரையும் அமைந்துள்ள இடத்தையும் லேபலையும் உள்ளடக்கி 2025.09.26 திகதியன்று காட்சிப்படுத்தியுள்ளது.

அதனையடுத்து குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளர், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அடங்கிய வீடியோவை அகற்றுமாறும் அதனால் தனக்கும் தனது வியாபார நிலையத்திற்கும் அவதூறு ஏற்பட்டுள்ளதாகவும் தொலைபேசியினூடாக குறித்த ஊடக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். அதற்கு குறித்த ஊடக நிறுவனம் தாம் இத்தகவல்களை பொது சுகாதார பரிசோதகர்களால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பதிவிட்டதாகவும் அதனால் அதை அகற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அதன் பின்னர் கடை உரிமையாளரால் குறித்த ஊடக நிறுவனத்திற்கு “சைபர் குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கும் 2025.09.27 அன்றைய தினம் முறைப்பாடு செய்தத்தாகவும் குறிப்பிடுகிறார். எனினும் குறித்த ஊடக நிறுவனத்தால் பதிவிடப்பட்ட வீடியோ சமூக வலைத்தளம் மற்றும் செய்தித் தளங்களில் வைரலாக பகிரப்பட்டதால் கடந்த 45 ஆண்டுகளாக நன்மதிப்போடு இயங்கிவரும் தனது வியாபார நிலையத்திற்கு பாரிய அவப்பெயரும் இழுக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் உடனே குறித்த வீடியோவை நீக்கம் செய்யக் கோரியும் தனக்கும் தனது வியாபார நிலையத்திற்கும் ஏற்பட்ட அவதூறு காரணமாக நட்ட ஈடாக 50 மில்லியன் ரூபாவும் அவதூறான வீடியோவை பதவிட்டமைக்காக மன்னிப்பு கோரி வீடியோவொன்றை பதிவிட வேண்டும் போன்ற நிவாரணங்களை கோரி அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

குறித்த வழக்கு 2025.10.01 அன்றைய தினம் மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது பொது பரிசோதக உத்தியோகத்தர்களால் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளதாக முன்வைக்கபட்ட வாதங்களை கருத்தற்கொண்டு குறித்த வீடியோவினை உடனே நீக்கம் செய்யவேண்டுமென இடைக்கால தடையுத்தரவை மாவட்ட நீதிபதி வழங்கியுள்ளார்.

அதேப்போன்று பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த வியாபார நிலையத்திற்கு எதிராக அன்றைய தினமே நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் “ தாம் எந்தவொரு சந்தர்பத்திலும் குறித்த பாண் பொதியில் மனித விரலின் தோல் பகுதி இருந்ததாக உறுதிப்படுத்தவில்லை” என்றும் அது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எதுவும் தாக்கல் செய்யவில்லை என்பதையும் அட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு அறிவித்துள்ளனர். இதன் பின்னரே குறித்த இடைக்கால தடை உத்தரவை மாவட்ட நீதிபதியால் குறித்த ஊடக நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில் வழங்கியுள்ளார். அட்டன் மாவட்ட நீதிமன்ற வரலாற்றில் ஓர் ஊடக நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதலாவது அவதூறு (Defamation) வழக்கு இதுவென்பதோடு குறித்த வழக்கில் வழக்காளியான குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளர் சார்பாக சட்டத்தரணி நேரு கருணாகரன் இவ்வழக்கை தாக்கல் செய்து ஆஜராகியுள்ளார். உடனடியாக குறித்த வீடியோவினை அகற்றுமாறும் எதிர்வரும் 2025.10.15 ம் திகதியன்று குறித்த வழக்கின் எதிராளியான குறித்த இணைய ஊடக நிறுவனத்தை ஆஜராகுமாறும் மாவட்ட நீதிபதி உத்தவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *