ஆசிரியர் தலையங்கம் : 06
வணக்கம் என் உறவுகளே!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று (6) வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பில் பிரித்தானியாவின் தலைமையில் பல நாடுகளின் இணை அனுசரணையுடன் முன்வைக்கப்பட்ட இத்தீர்மானம், பல மாதங்களாக நடைபெற்ற விவாதங்களின் இறுதி கட்டமாகும்.
இந்தத் தீர்மானம், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் கண்காணிப்பு மற்றும் சாட்சிகள் சேகரிப்பு அதிகாரத்தை மேலும் நீடிப்பதாக தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 27 நாடுகளின் ஆதரவுடன் சமர்ப்பிக்கப்பட்ட இத்தீர்மானம், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளமை, உலக சமூகம் இலங்கையில் நிலவும் பிரச்சினைகள் குறித்த பொதுவான அக்கறையை வெளிப்படுத்துகிறது.
ஆனால், இலங்கை அரசு இன்றும் பழைய நிலைப்பாட்டைத் தொடர்கிறது. சர்வதேச தலையீடுகளை “மேற்குலகின் நலன்களுக்கான அரசியல் திட்டம்” என வர்ணித்து, சாட்சிகள் சேகரிப்பு உள்ளிட்ட வெளிப்புற பொறிமுறைகளை எதிர்த்து வருகிறது. இந்த எதிர்ப்பு, நீண்டகாலமாக நிலைத்து வரும் மறுப்பு மற்றும் மறைவு அரசியலின் தொடர்ச்சி மட்டுமே.
தமிழர் சமூகமும், மனித உரிமை அமைப்புகளும் சுயாதீனமான, சர்வதேச அளவிலான விசாரணை வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஏனெனில், உள்நாட்டு பொறிமுறைகள் கடந்த பல தசாப்தங்களாகவே தோல்வியடைந்துள்ளன. காணாமல் போனவர்கள், படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இடம்பெயர்ந்த குடும்பங்கள் – இவர்களுக்கான உண்மையும் நீதியும் இன்னும் வழங்கப்படவில்லை.
ஐ.நா.வில் இம்முறை நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம், நிகழ்ச்சி நிரல் 2-இன் கீழ் இருப்பதால், தமிழ் தரப்புகள் வலியுறுத்துவது போல நாட்டுக்கே உரிய விசேட அறிக்கையாளரை (Special Rapporteur) நியமிக்கும் பணி இன்னும் மிக அவசியமாகின்றது. அதுவே, நிலைமாறுகால நீதியை உறுதி செய்யும் ஒரே பயனுள்ள வழியாகும்.
இலங்கை அரசு இன்றும் மறுப்பு அரசியலைத் தொடர்ந்து வந்தாலும், சர்வதேச சமூகம் இனியும் மௌனம் காக்க முடியாது. நீதியை கோரும் குரல்கள் 16 ஆண்டுகளாக அடங்காத போராட்டத்தில் இருக்கின்றன. அவற்றை புறக்கணிப்பது, இனப்படுகொலைக்கு துணை நிற்பதற்கே சமம்.
உலக நாடுகள் இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வரலாறு அவர்களையும் குற்றவாளிகளின் பக்கத்தில் நிறுத்திவிடும்.
என்றும் அன்புடன்,
ஆசிரியர்
அ. அருள் சஞ்ஜீத்

