ஆசிரியர் தலையங்கம் : 07
வணக்கம் என் உறவுகளே!
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாங்குளம் என வட இலங்கையின் ஒவ்வொரு மாவட்டமும் இப்போது ஒரு புதிய அபாயத்தின் பெயராக மாறி வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் வெளிவந்த கைது செய்திகள் ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல. அது ஒரு சமூகத்தின் சிதைவுக்கான எச்சரிக்கை மணி என்பதையே உணர்த்துகின்றது.
இன்றையதினம் (7) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் உணவுப் பொதியினுள் மறைத்து ஹெரோயின் மற்றும் கஞ்சா கொண்டு செல்ல முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அச்சுறுத்தல் எவ்வளவு ஆழமாகச் சமூகத்தின் எல்லா அடுக்குகளையும் ஊடுருவி விட்டது என்பதற்கான அப்பழுக்கற்ற சாட்சியாக உள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் (6) ஒரு இளம் பெண் தனது கணவனுக்காக யாழ்ப்பாண சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்றது, ஒரு குடும்பம் எவ்வாறு அந்த வலைக்குள் சிக்கிக்கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
கடந்த செப்டம்பர் 9 முதல் இன்று ஒக்டோபர் 7 வரை — ஐஸ், ஹெரோயின், கஞ்சா, போதை மாத்திரைகள் என 10 க்கும் மேற்பட்ட முக்கிய கைது சம்பவங்கள் வடபகுதியிலேயே இடம்பெற்றுள்ளன. இது சட்ட அமுலாக்கத்தின் திறனை விட தமிழ் சமூகத்தின் இயலாமையை அதிகம் காட்டுகிறது.
வடக்கின் இளைஞர்கள் போருக்குப் பின்னர் வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு என பல சவால்களில் சிக்கிக் கொண்டுள்ளனர். அந்த மன அழுத்தம் மற்றும் வாழ்வியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி, போதைப்பொருள் வர்த்தக வலையமைப்புகள் தங்கள் களத்தை விரித்து வருகின்றன. கடல் வழி கடத்தல், குற்ற வலையங்கள், மற்றும் சில அரசியல் பாதுகாப்புகளின் பின்னணியில் இவ்வலையமைப்புக்கள் வேரூன்றி வளர்கின்றன.
ஆனால் கேள்வி இதுதான் — இந்த பிரச்சனைக்கு எதிராக யார் நிற்கின்றனர்?
போதைப்பொருள் கைப்பற்றல்களும், கைதுகளும் மட்டுமே தீர்வாகாது. நாளைய தலைமுறையை மீட்பதற்கான மனப்பூர்வமான சமூக எழுச்சி தேவை. அரச இயந்திரம், பொலிஸ், கல்வித்துறை, சமூக நல அமைப்புகள், பெற்றோர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் சேர்ந்து இந்த விஷப் புயலுக்கு எதிராக நிற்க வேண்டும். இல்லையெனில், ஒரு முழு தலைமுறையை இழக்கும் அபாயம் நம்மை எதிர்நோக்கியுள்ளது.
சட்டத்தின் கையால் பயம் உருவாக்கலாம்;. ஆனால் விழிப்புணர்வின் கையால் மட்டுமே மாற்றம் உருவாகும்.
போதைப்பொருள் வலையில் சிக்கியுள்ள இளைஞர்களை குற்றவாளிகளாக அல்ல, மீட்கப்பட வேண்டிய உயிர்களாக பார்க்கும் மனப்பாங்கே இக்காலத்தின் தேவையாக உள்ளது.
இளைஞர் ஒருவரின் வீழ்ச்சி ஒரு குடும்பத்தின் சிதைவு. ஆயிரம் இளைஞர்கள் வீழ்ந்தால் அது ஒரு சமூகத்தின் சாவு.
வடபகுதி மட்டுமல்ல, கிழக்கும் கூட இன்று அந்த எல்லையில் நின்று கொண்டிருக்கிறது.
போதையின் பிடியிலிருந்து விடுபட வேண்டுமெனில், சமூகமே குரல் கொடுக்க வேண்டும்.
இல்லையெனில் “வடக்கின் எதிர்காலம்” போதைப் பொருளின் புயலில்; மறைந்து விடும்.
இனியாவது சிந்திப்போமா!!
என்றும் அன்புடன்
ஆசிரியர்
அ.அருள் சஞ்ஜூத்

