இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வானது வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி திருகோணமலை மாவட்டத்தில் ஜேகப் கடற்கரை ஹோட்டலில் நேற்று(16) இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட தேசிய அடைவு மட்டத்தினைப் பெற்றுக் கொண்டமைக்காக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன்க்கு இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தலைவரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் திருமதி. லி. கேகிதா, முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் (பதில் கடமை) திருமதி. கி. வான்மதி, முன்னாள் சமுர்த்திப் பணிப்பாளர் திரு. எம். முபாறாக் ஆகியோரும் விருதினை பெற்றுக் கொண்டார்கள்.
மேலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் 2024 ஆம் ஆண்டு தேசிய இலக்கினை அடைந்து கொண்டமைக்கு முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரும் தற்போதைய மேலதிக அரசாங்க அதிபருமான (காணி) திரு.சி.ஜெயகாந்த்க்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் முன்னாள் புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளரும் தற்போதைய மாந்தை கிழக்கு பிரதேச செயலாளருமாகிய செல்வி ம. சர்மிலிக்கும் சமூக பாதுகாப்பு விடயப் பொறுப்பு உத்தியோகத்தர் திருமதி. வே. ஸ்ரெப்னிக்கும் இவ் நிகழ்வில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் விருதிற்கு தகுதி பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி பணிப்பாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் இணைப்பதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு விருதுகள் பெற்றுக் கொண்டார்கள்.





