கல்முனை சந்தாங்கேணி நீச்சல் தடாகத்திற்கான வேலைத்திட்டங்களை ஆதம்பாவா எம்.பி. துரிதகதியில் மேற்கொண்டு, உத்தியோகப்பூர்வமாக உரிய அதிகாரிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று(30) இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் விளையாட்டு அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மந்த கதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த கல்முனை சந்தாங்கேணி நீச்சல் தடாகத்தின் வேலைத்திட்டத்தை விரைவாகப் பூரணப்படுத்தி, பொதுமக்களின் பாவனைக்கு கொண்டு வரும் முகமாக விளையாட்டுத்துறை அமைச்சருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளரை நேரடியாக அழைத்து வந்து, எடுத்த முயற்சிகள் காரணமாகவும், சில இயந்திரங்களை இயங்கு நிலைக்கு கொண்டு வந்தும் மற்றும் நீச்சல் தடாகத்திற்கு மின்சாரம் பெற்றுக் கொடுத்தும் வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தி, பாவனைக்கு வரும் வகையிலான ஏற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா செய்திருந்தார்.
இந் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா, மாநகர ஆணையாளர், பொறியாளர், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர், பிரதிப்பணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில், கல்முனை மாநகர ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சினால் 2025 வரவு – செலவு திட்டத்தின் போது கல்முனை சந்தாங்கேணி மைதான விளையாட்டரங்குக்கு அபிவிருத்திற்கு 150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந் நீச்சல் தடாகமானது விளையாட்டுத்துறை அமைச்சரின் பங்குபற்றுதலுடன் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டவுள்ளது.
இந்த நீச்சல் தடாகத்திற்கு பாதுகாப்பு அதிகாரி மற்றும் பயிற்றுனர்கள் நியமிக்கப்படுவதோடு, முறையாக நீந்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன.
இங்கு ஒரு மாத, இரு மாத மற்றும் மூன்று மாத காலம் பயிற்சி பெற்ற அதிகாரிகளால் நீச்சல் பயிற்சிகள் வழங்கப்படவிருப்பதுடன் எமது பிரதேசத்தில் எதிர்காலத்தில் தேசிய, சர்வதேச ரீதியில் நீச்சல் வீரர்களை உருவாக்குவதற்கும் இது சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
பாடசாலை மாணவர்களுக்கும் நீச்சல் பயிற்சி வழங்குவதற்கும் இந்த நீச்சல் தடாகம் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படவுள்ளதுடன் மாநகர சபைக்கு வருமானத்தை ஈட்டி தரும் வகையிலும் பயன்படுத்தப்படவுள்ளது.
இதில் வயது வந்தவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், என பலரும் பயிற்சி பெறுவதோடு, நீச்சல் பயிற்சி இனி எல்லோரும் பெறக்கூடிய வகையிலான சந்தர்ப்பத்தை இந்த நீச்சல் தடாகம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.