ஆலையடிவேம்பு பிரதேச சபையை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து ஊழல் மோசடிகளை செய்துள்ளனர். எனவே நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் பிரதேசத்தின் அபிவிருத்தியை திட்டமிட்டு செயற்படுத்துவோம். எனவே தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவும் என சுயேட்சைக்குழு அன்னாசிப்பழ சின்னத்தில்; போட்டியிடும் கலு ஆராச்சிகே கசுன் சம்பத் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரகுபதி தலைமையில் அன்னாசிப்பழ சின்னத்தில் சுயேட்சைக்குழுவில் களமிறங்கியுள்ள வட்டார வேட்பாளர் கலு ஆராச்சிகே கசுன் சம்பத் இன்று(01) ஆதரவாளர்களை சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த பிரதேச சபை உருவாகிய காலம் தொடக்கம் இன்று வரை ஒரு நீண்டகால திட்ட மிட்ட அபிவிருத்திகளை ஆட்சி செய்தவர்கள் செய்யவில்லை. இதனால் மழைக் காலங்களில் எமது பகுதிகளில் மழை நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நின்று மழை வெள்ளத்தில் மக்கள் சொல்லொன்னா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதற்கு அடிப்படைக் காரணம் ஒரு திட்டமிடல் இல்லை. ஆட்சிக்கு வருபவர்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் வடிகான்களை அமையாது வீதியை அமைப்பார்கள். பின்னர் வடிகான்களை அமைக்கும் போது போட்ட வீதிகளை உடைப்பார்கள். இவ்வாறு ஒரு திட்டமிடல் இல்லாது அபிவிருத்தி என்ற போர்வையில் பல மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தை வீணடித்துள்ளனர்.
கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை புதிதாக உருவாக்கப்பட்ட போது ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குள் இருந்த சுமார் 50 தமிழ் குடும்பங்களை அவர்களது எல்லைக்குள் உட்புகுத்தி ஆலையடிவேம்பு பிரதேச எல்லையை அபகரித்தனர். அப்போது ஆட்சி செய்தவர்கள் இதை தடுத்து நிறுத்தாது வாய்கட்டி மௌனிகளாக இருந்தனர். இவ்வாறு எமது பிரதேச எல்லைகள் தினம் தினம் அபகரிக்கப்பட்டு வருகின்றது.
எனவே இந்த நில அபகரிப்பை தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காது ஒரு நீண்ட கால நிலையான அபிவிருத்திக்கு திட்டமிட்டு அதனை செயல்படுத்துவதன் மூலம் தான் எமது பிரதேசத்தை ஏற்படும் மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.
ஆகவே எமது பிரதேசத்தை காப்பாற்ற வேண்டும். ஊழல் மோசடியற்ற அபிவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால் ஒவ்வொரு தமிழ் மக்களும் சிந்தித்து எமது சின்னமான அன்னாசிப்பழத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். நாங்கள் இளைஞர்களும் எதிர்கால சந்ததியினரும் நிம்மதியாக வாழ்வதற்கான அபிவிருத்தியை மேற்கொள்ளுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.