மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம். சுபியானின் ஒழுங்குபடுத்தலின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்ட முகவர்களுக்கான தெளிவூட்டும் கலந்துரையாடல் நடைபெற்றது.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்களின் போது கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் அதிகாரம் அளிக்கப்பட்ட முகவர்களுக்கான நியமனம் மற்றும் இவர்களுக்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பான விரிவான விளக்கங்கள் உதவித் தேர்தல்கள் ஆணையாளரினால் வழங்கப்பட்டது.
ஒரு வாக்கெடுப்பு நிலையத்திற்கு முகவர்கள் இருவரை நியமிக்க முடிவதுடன் ஒரு வாக்கெண்ணல் நிலையத்திற்கு போட்டியிடும் கட்சி அல்லது குழு சார்பாக இரண்டு முகவர்கள் வீதம் நியமனம் செய்ய முடியும் என்பதுடன் அஞ்சல் வாக்கெண்ணும் நிலையமொன்றிற்கு இரண்டு முகவர்கள் நியமனம் வழங்க முடியும். மேலும் முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய விடயதானங்கள் தொடர்பாக இதன் போது தெளிவூட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி. நவருபரஞ்சினி முகுந்தன் கலந்து கொண்டார்.
இதன் போது அதிகாரம் அளிக்கப்பட்ட முகவர்களினால் முன்வைக்கப்பட்ட வினாக்களுக்கான விளக்கங்கள் அதிகாரிகளினால் வழங்கப்பட்டது.


