மட்டக்களப்பில் “ஈழத்து சிறை” கவிதை நூல் வெளியீடு

பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்ச்சித் தொடர் – 62 மட்டக்களப்பு த் தமிழ்ச் சங்கம், மகுடம் கலை இலக்கிய வட்டம் இணைந்து நடாத்திய கவிஞர் வில்சன் சுதாகரின் “ஈழத்துச் சிறை”- கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியை திருமதி புளோரன்ஸ் பாரதி கென்னடி பிரதம விருந்தினராகவும், சிரேஷ்ட விரிவுரையாளர்களான பேராசிரியர் சு.சிவரட்ணம் மற்றும் கலாநிதி பிரியா ஜெகதீஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

 

இதன்போது தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட, இந்நிகழ்வில், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கப் பொருளாளர் கந்தையா தியாகராஜா தமிழ்த்தாய் வாழ்த்தினையும், மட்டக்களப்பு மதுரங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் சதாசிவம் கார்த்தீபன் நூலாசியர் அறிமுகத்தையும், கவிஞர் றியாஸ் குரானா நூல் நயவுரையையும், மகுடம் வி.மைக்கல் கொலின் நூல் வெளியீட்டுரையையும், ஏற்புரையையும், நன்றியுரையையும் இணைத்ததாக நூலாசிரியர் கவிஞர் வில்சன் சுதாகரும் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

 

இங்கு வெளியீடு செய்யப்பட்ட நூலின் முதல் பிரதியினை தொழிலதிபர் லயன் ஆர்.லலித்குமார் பெற்றுக் கொள்ள, நிகழ்வில் கலந்து கொண்டோருக்குச் சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

 

இந்நிகழ்வுகளை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க துணைப் பொதுச் செயலாளர் இரா.பிரதீஸ்காந் தொகுத்து வழங்கினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *