ஆறு மாடிக் கட்டடத்தின் நிர்மாணத்தில் மாகாணசபை அதிக சுமையை ஏற்கும் வகையில் ஒப்பந்தக்காரரினால் தயாரிக்கப்பட்ட நிர்மாணக் கொள்முதல் நடைமுறையைத் தெரிவுசெய்து – சாத்தியக்கூற்று அறிக்கையும் பெற்றுக்கொள்ளப்படவில்லை – கோபா குழு கேள்வி
வடமேல் மாகாணசபை மற்றும் குருநாகல் மாநகரசபை ஆகியன இணைந்து ஆறுமாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக கேள்விப் பத்திரங்களைக் கோரி ஒப்பந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்ததுடன், இது தொடர்பில் காணப்படும் மேற்பார்வை நடவடிக்கைகள் காரணமாக இந்தக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பது அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) தெரியவந்தது. இதுபோன்ற கட்டடங்களை அமைப்பதற்கு முன்னர் சாத்தியக்கூற்று ஆய்வு அறிக்கை பெறவேண்டியிருக்கின்றபோதும் அவ்வாறான அறிக்கை பெற்றுக் கொள்ளப்படவில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. அத்துடன், விசேடமான வடிவமைப்பைக் கொண்ட கட்டுமானம் இன்றி, சாதாரண வகையிலான அலுவலகக் கட்டடத்தை அமைப்பதற்கு மேல்மாகாண சபை அதிக சுமையை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தகாரரினால் நிர்மாண கொள்முதல் நடைமுறை தெரிவுசெய்யப்பட்டிருப்பது பிரச்சினைக்குரியது என்பதும் கோபா குழுவினால் வலியுறுத்தப்பட்டது.
வடமேல் மாகாணசபை தொடர்பான 2023, 2024ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தலைமையில் அண்மையில் (23) கூடியபோதே இந்த விடயங்கள் தெரியவந்தன.
இதற்கமைய குறித்த கட்டுமானம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு மீண்டும் ஒருமுறை அதிகாரிகளை அழைப்பதற்கும், ஒரு மாத காலத்திற்குள் குறித்த கட்டடம் தொடர்பான பரிந்துரைகள், கொள்முதல் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களின் அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்கள் சகலவற்றையும் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

