யாழ் வடமராட்சி கிழக்குப் பகுதியில் பாரியளவு சட்ட விரோதமான மண் விநியோகம் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஒரு சில நாட்களுக்கு முன் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தித் குழுத் தலைவருமான இளங்குமரன் ஊடகவியலாளர் லின்ரனின் வேண்டுகோளுக்கு இணங்க சட்ட விரோதமாக மண் விநியோகம் இடம்பெறும் இடங்களைப் பார்வையிட்டு அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறிச் சென்றதன் பின்னர் ஒரு சில நாட்கள் சட்ட விரோதமாக மண் விநியோகம் இடம்பெறாமல் இருந்து; தற்போது வடமராட்சிக் கிழக்குப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் பொறுப்பேற்றதன் பின்னர் மீண்டும் வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் சட்டவிரோத மண் விநியோகம் இடம்பெற்று வருகின்றன.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;
வடமராட்சிக் கிழக்குப் பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளான தாழையடிக் கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம் அமைந்துள்ள இடத்தின் பின்பகுதி, குடாரப்பு பகுதி, செம்பியன் பற்று வடக்குப் பகுதி, செம்பியன் பற்று தெற்குப் பகுதியில் உள்ள இயற்கை சமநிலையைப் பேணுவதற்கான நிரந்தர மர நடுகை எனும் பெயரில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும் வனப்பிரதேசப் பகுதி போன்ற இடங்களில் தற்போது பாரியளவு சட்ட விரோதமான மண் விநியோகம் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் இச் சட்ட விரோதமான மண் அகழ்வானது பகல் நேரத்தில் குடாரப்பு பகுதியில் இடம்பெற்று வருவதாகவும் ஏனைய பிரதேசங்களில் இரவு நேரங்களில் மண் விநியோகம் இடம்பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் தாழையடி பிரதேசத்தில் இடம்பெறும் சட்ட விரோதமாக மண் அகழும் இடத்தில் இருந்து மருதங்கேணி பொலிஸ் நிலையம் சுமார் 1கிலோ மீற்றர் தூரத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்றும் தற்போது குறிப்பிட்ட மண் அகழ்வு இடம்பெறும் இடங்கள் பாரியளவு நீர்த்தேக்கங்கள் போல் காட்சி அழிப்பதாகவும் இனி வரும் காலங்கள் மழைக்காலம் என்பதால் பாரியளவு உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ள இடங்களாக மாறி உள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதேச மக்கள் தமது ஐயத்தினை வெளிப்படுத்தி உள்ளதோடு குறிப்பிட்ட இடத்தை அடையாளப்படுத்தும் ஏற்பாடுகள் இல்லையெனில் நீர்த்தேக்கங்களை சமப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்து தருமாறு கேட்டு நிற்கின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இச் சட்ட விரோதமான மண் அகழ்வுகளில் ஈடுபடும் மண் மாஃபியாக்கு எதிராக உடனடியாக இல்லை என்றால் படி முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிச் சென்றும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தால் மக்கள் தற்போதைய அரசாங்கத்தில் அவநம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போது பொறுப்பேற்றுள்ள வடமராட்சிக் கிழக்கு அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் இச் சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்போகிறார் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
இச் சட்ட விரோதமான மண் விநியோக செயற்பாடுகளுக்கு மருதங்கேணிப் பொலிஸார் தமது கடமைகளைத் திறன் படச் செய்தால் முற்றாக இச் சட்ட விரோதமான செயற்பாடுகளை ஒழிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

