பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து மீண்டெழுந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எமது வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை வழங்கியமைக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வடக்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்துக்கு 42 ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 36 பேர் சுதேச வைத்தியத்துறையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கும் 6 பேர் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் கீழும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமன நிலையங்களை வழங்கும் நிகழ்வு பண்ணையிலுள்ள சுகாதாரக் கிராமத்தில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இன்று(07) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், வேலை இல்லை என்று சொல்லி தங்களுக்கு அரசாங்க வேலை கோருவார்கள். வேலை கிடைத்த பின்னர் வீட்டுக்குப் பக்கத்தில் திணைக்களத்தைக் கேட்பார்கள். நீங்கள் அப்படிச் செய்யக்கூடாது.
இதுவரை காலமும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் இல்லாமையால் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மிகப் பெரும் சவால்களை நாம் சந்தித்திருந்தோம். இந்த நியமனங்கள் ஊடாக அது சரிசெய்யப்பட்டுள்ளது.
சுதேச மருத்துவம் என்பது ஒரு சாதாரண சிகிச்சை முறை மட்டும் அல்ல. அது நமது தொன்மையான பண்பாட்டு மரபின் உயிரோட்டம். நமது மண்ணின் செடிகள், மூலிகைகள், இயற்கை வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் தலைமுறைகளின் அனுபவ ஞானத்தின் அழகிய சங்கமமே இந்த சிகிச்சை முறை. இந்த மரபு தொலைந்து போகாமல் பாதுகாக்கப்படவேண்டும்; புதிய தலைமுறைக்கு உரிய முறையில் பரிமாறப்படவேண்டும்; அதில் நீங்கள் வகிக்க உள்ள பங்கு மிகப் பொறுப்பானதும் பெருமைமிக்கதுமானதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்திய கலாநிதி தில்லையம்பலம் சர்வானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

