கொழும்பில் கைத்துப்பாக்கியுடன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, கைத்துப்பாக்கியை தான் பிறிதொரு நபருக்கு வழங்க எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார். அதனை அடுத்து துப்பாக்கியைப் பெற இருந்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வத்தளை பகுதியில் நேற்று(08) வீதி போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த காரினை மறித்து சோதனையிட முயன்றுள்ளனர்.
அதன்போது சாரதி, காரினை நிறுத்தாது பொலிஸாரின் கட்டளையை மீறி தொடர்ந்து பயணித்துள்ளார். அதனை அடுத்து பொலிஸார் காரினை துரத்தி சென்று, வழிமறித்து சோதனையிட்டனர்.
சோதனையின் போது, காரின் சாரதியின் இருக்கையின் கீழிருந்து கைத்துப்பாக்கியை மீட்டுள்ளனர். அதனை அடுத்து, சாரதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, சாரதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும், கைத்துப்பாக்கியை வத்தளையை சேர்ந்த நபர் ஒருவருக்கு வழங்க வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில், சாரதி குறிப்பிட்ட நபரையும் வத்தளை பகுதியில் வைத்து, பொலிஸ் விசேட குழுவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும், பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

