மாவீரர் நாளை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் நேற்று(11) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துயிலும் இல்ல வளாகத்தில் தீபம் ஏற்றி துப்பரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன், ஏற்பாட்டுக் குழுவினர், இளைஞர் மற்றும் யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சுத்தம் செய்யப்பட்டு அதற்கு அருகில் உள்ள இடத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்திலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. இளைஞர்கள் – யுவதிகள் எனப் பலரும் இப் பணியில் ஈடுபடுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

