அரசியல் இலாபத்திற்காக மக்களைப் பலிகொடுக்காதீர்கள்

ஆசிரியர் தலையங்கம் : 10

வணக்கம் என் உறவுகளே!

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை அருகே சட்டவிரோதமாக வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக கடந்த இரு நாட்களாக நாட்டின் அரசியல் சூழல் மீண்டும் இனவாதத் தீப்பொறிகளில் எரிந்துகொண்டிருக்கிறது. சமூக ஒற்றுமையை நசுக்கும் வகையில் வெளியான கருத்துக்களும், அதனைச் சூடுபிடித்து அரசியல் இலாபம் தேடும் தரப்புகளும் கடந்தகால அரசியல் வரலாற்றை மீண்டும் உயிர்ப்பித்திருக்கின்றன.

சம்பவம் ஒன்றே, ஆனால் அதனைச் சுற்றிய அரசியல் அணுகுமுறைகள் பல. காவல்துறை சிலையை அகற்றியது பாதுகாப்புக்காக என அமைச்சர் ஆனந்த விஜேபால கூற, அதேவேளை சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச வெளியிட்ட கருத்துக்கள் தெளிவாக இனவாத அடிப்படையிலானவை. பௌத்த முன்னுரிமையையும் தேசியமயப்பட்ட ஒரு அரசியல் வரையறையையும் முன்வைக்கும் வகையில் கூறப்பட்ட இந்த கருத்துக்கள் தமிழ் தரப்பினரின் நியாயமான எதிர்ப்பை மேலும் தூண்டியுள்ளன.

இவ்வளவு பெரும் இனவாத பின்புலத்தைக் கொண்ட இந்தக் கருத்துக்கள் பெரிதாக விமர்சிக்கப்படாமல், ஆனந்த விஜேபால வெளியிட்ட கூற்றே அதிகம் பேசப்பட்டதுதான் கவலைக்குரிய விடயம். அரசியல் வர்ணப்படுத்தல்கள், பக்கச்சார்புகள், மற்றும் யாரைத் தாக்கினால் அதிக அரசியல் பலன் கிடைக்கும் என்பதைக் கணித்த செயல்பாடுகள் இங்கு வெளிப்படுகின்றன.

சிறப்பாக தமிழ் அரசியல் வட்டாரத்திலும் இது விலக்கல்ல. தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த பதவி விலகல் கோரிக்கை, தேசிய மக்கள் சக்தியைக் குறித்த கூற்றுகள் – இவை அனைத்தும் இனவாத கருத்துக்களுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடாக அல்ல, மாறாக அரசியல் பலனைக் கருதி எடுத்த உத்திகளாகவே விமர்சிக்கப்படுகின்றன. நாமல் ராஜபக்ச உடனான சந்திப்பு, 21 ஆம் திகதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சி பேரணியை அரசியல் முக்கியத்துவத்துடன் பார்ப்பது போன்ற அம்சங்கள் இவ்வாய்ப்பை மேலும் ஆழமாக்குகின்றன.

இங்கு எழும் கேள்வி மிக எளிது:

எந்த அரசியல் தரப்பின் கருத்தாக இருந்தாலும், தமிழ் மக்களை அவமதிக்கும், இனவாதத்தைத் தூண்டும் குரல்கள் ஏன் சமமாய் கண்டிக்கப்படவில்லை?

தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை, உரிமைக்காக குரல் கொடுக்கின்றோம்;, தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு என்று பேசுபவர்கள், இனவாதமான கருத்துக்கள் எந்தத் தரப்பிலிருந்தும் வந்தாலும் அதனை எதிர்த்து பேச வேண்டும். ஆனால் இன்று சில அரசியல் தலைவர்கள் தங்களுக்கு பயனான இடங்களில் மட்டும் குரல் கொடுப்பதும், தங்களுக்கு சிரமமான இடங்களில் மௌனமாக இருப்பதும் மிக ஆபத்தான அரசியல் போக்காகியுள்ளது.

திருகோணமலை சம்பவம் ஒரு சிலை குறித்து மட்டும் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது நாட்டின் நல்லிணக்கம்;, இனங்களுக்கிடையேயான ஒற்றுமை, மற்றும் அரசியல் நேர்மை குறித்து எழுந்துள்ள பெரும் கேள்வியாகும்.

இனவாதத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிய காலங்களே நாட்டை பின்னுக்கு தள்ளிவிட்டன. இன்று அதே பாதையில் மீண்டும் செல்ல முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டிய தருணம் இது.

அரசியல்வாதிகளின் நாடகத்தால் துண்டப்படுபவர்கள் அப்பாவி மக்கள் தான்.

சமாதானமும் ஒற்றுமையும் நிலைத்து நிற்க வேண்டுமானால் அரசியல் இகழ்ச்சிகளால், இனவாதக் கருத்துக்களால் மக்களைப் பிரிப்பதைக் கட்டாயம் நிறுத்த வேண்டும்.

தீயை பரப்பும் அரசியல் தலைவர்களைப் பின்பற்றாமல், தீயை அணைக்கும் தலைமைத்துவத்தை உருவாக்குவது என்பதே இன்றைய பெரும் சவாலாகவுள்ளது.

இதற்காக மக்களின் விழிப்புணர்வும், ஊடகங்களின் பொறுப்பும், அரசியல்வாதிகளின் நேர்மையும் – மூன்றும் ஒன்றிணைய வேண்டியது அவசியமானதொன்றாகும்.

 

என்றும் அன்புடன்

ஆசிரியர்

அ.அருள் சஞ்ஜூத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *