ஆசிரியர் தலையங்கம்: 11
சமூகத்தின் மனசாட்சிக்கான கேள்வி
வணக்கம் என் உறவுகளே!
தமிழ் அரசியல் கைதி சச்சிதானந்தன் ஆனந்த சுதாகரின் குடும்பம் மீண்டும் ஒருமுறை பேராபத்தின் முன் நிற்கிறது. 17 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருடைய நீண்ட பிரிவை தாங்க முடியாமல் 2018ல் உயிரிழந்த மனைவிக்கு பின்பு, இரண்டு பிள்ளைகளையும் பாதுகாத்து வந்த 75 வயது பேத்தியாரும் உயிரிழந்துள்ளார். இதன் விளைவாக அந்த இரண்டு குழந்தைகளும் முழுமையாக அநாதரவாக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டுள்ளனர். இந்த நிலை இன்று தமிழ் சமூகத்தைக் கேள்வி கேட்க வைத்துள்ளது.
ஒரு தந்தை உயிருடன் இருக்க, இரண்டு பிள்ளைகள் அநாதையாகித் தவிக்க வேண்டியது எந்த நாகரிகச் சமூகத்தின் நீதி?
2008ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆனந்த சுதாகர் இன்று 17 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டத்தின் அடிப்படை நெறிகள் கூட அங்கு செயல்படுகின்றனவா? மனிதாபிமானம் என்னும் சொல் கூட இந்தச் சூழ்நிலையில் பொருள் இழந்து போவதாக தோன்றுகிறது.
அவரின் மனைவியின் இறுதிச் சடங்கின் போது, சிறைச்சாலை வாகனத்தில் அப்பாவுடன் செல்லத் தயாராகிய மகள் ஏறிய அந்த காட்சி—அது வெறும் செய்தி அல்ல. முழு சமூகத்தின் மனதை உலுக்கிய குரல். அது குழந்தைகளின் பிரிவுத் துயரையும் பாசத்திற்கான போராட்டத்தையும் வெளிப்படுத்தியது.
இன்று அவர்களின் பேத்தியாரும் மறைந்த நிலையில், குழந்தைகள் மீண்டும் வாழ்வின் கடுமையான வெற்றிடத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் “குரலற்றவர்களின் குரல்” அமைப்பு முன்வைத்த கோரிக்கை ஒரு உண்மையான மனிதாபிமான கேள்வியாக எம்முன்னே நிற்கிறது:
இந்த நிர்க்கதியற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ள குழந்தைகளின் எதிர்காலத்தை யார் காப்பாற்றப் போகிறார்கள்?
இங்கு அரசியல், சட்டம், தேசிய பாதுகாப்பு, எந்த கோணத்திலும் பார்க்கலாம். ஆனால் முதலில் பார்க்க வேண்டியது மனிதாபிமான கோணமே.
ஒரு தந்தை தனது இரு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதே அடிப்படை மனித உரிமை.
அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்தாலும், ஒரு குடும்பம் முழுமையாக சிதைந்து போகும் வரையில் தீர்வு காண முடியாத அரசியல் அமைப்பு எதற்காக? பிள்ளைகள் அனாதைகளாக மாறும் வரை காத்திருக்க வேண்டியது எந்த நாகரிக சட்டமோ?
ஆனந்த சுதாகரின் விடுதலை இன்று ஒரு அரசியல் விவகாரம் அல்ல, அது முழு சமூகத்தையும் சோதிக்கும் மனிதாபிமானப் பரிட்சையும் கூட தமிழ் சமூகமாகவும், மனிதநேயத்தை முன்னிறுத்துவது யார் என்ற நிலைப்பாட்டில் உள்ளோரும் இந்தச் சூழ்நிலையில் மௌனமாக இருக்க முடியாது. இரண்டு குழந்தைகள் நிச்சயமற்ற இருளை நோக்கி தள்ளப்படுகின்றனர். இது ஒரு குடும்பத்தின் விபரீதம் மட்டுமல்ல, இது நீதி அமைதியாகும் போது எத்தனை உயிர்கள் சீரழிகின்றன என்பதற்கான மிகக் கொடுமையான எடுத்துக்காட்டு.
அதனால் இங்கு முன்னிலைப்பட வேண்டியது இரண்டு உயிர்களின் எதிர்காலம் மட்டுமே, மாறாக அரசியல் கோஷங்களோ, கட்சித் தகராறுகளோ அல்ல.
மனிதாபிமான அடிப்படையில், மறுபரிசீலனை நடைமுறைகள், நிபந்தனை விடுதலை, அல்லது சட்டத்தின் மனிதநேய பக்கங்கள் என எதனை எடுத்துக் கொண்டாவது ஆனந்த சுதாகர் தனது பிள்ளைகளுக்காக வீட்டிற்கு திரும்பும் வழியை ஏற்படுத்தியாகவேண்டும்.
ஒரே ஒருவருக்காக அல்ல, இரண்டு குழந்தைகளின் வாழ்க்கைக்காகவாவது சிறைச்சாலையின் கதவுகள் திறக்கப்பட வேண்டிய நேரம் இது.
தமிழ் சமூகமும், மனித உரிமைக்குரல் கொடுப்போர் அனைவரும் இந்த உண்மையைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அவசியமும் கூட.
என்றும் அன்புடன்,
ஆசிரியர்
அ.அருள் சஞ்ஜீத்

