மட்டக்களப்பில் கடத்தல் முயற்சி முறியடிப்பு – இருவர் கைது

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்திச் செல்ல முயன்ற ஆட்டோவை, வீதியில் வைத்து பெற்றோர் மடக்கிப் பிடித்த சம்பவம் நேற்று (14) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது, கடத்தல்காரன் ஆட்டோவை விட்டுவிட்டு தப்பியோடியதுடன், மயக்கமடைந்திருந்த சிறுமி காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், ஆட்டோவை மீட்க வந்த கடத்தலுடன் தொடர்புடைய ஒருவரையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்ததையடுத்து, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக தெரியவருவதாவது:

குறித்த சிறுமியை அவரது தந்தை, ஆங்கிலப் பாடத்திற்காக தனியார் கல்வி நிலையத்துக்கு சம்பவ தினமான நேற்று இரவு காரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மழை காரணமாக வகுப்பு நடைபெறாது என தெரிவிக்கப்பட்டதால், நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு அருகேயுள்ள ஒழுங்கையில் வசிக்கும் அவர்களது சிறிய தாயாரின் வீட்டில் சிறுமியை இறக்கிவிட்டு அவர் கடைக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், “சிறுமி வீட்டுக்கு வரவில்லை” என சிறிய தாயார் தொலைபேசி மூலம் சிறுமியின் தந்தையாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதையடுத்து, “நான்தான் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றேன்” என கூறிய தந்தையார் உடனடியாக காரில் அங்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த ஆட்டோ ஒன்று அவரைக் கண்டதும் பின்னோக்கி சென்று தப்பிக்க முயன்றுள்ளது. இதையடுத்து அவர் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மடக்கிப் பிடித்துள்ளார்.

இதனையடுத்து, ஆட்டோவை செலுத்தி வந்த இளைஞன் ஆட்டோவை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். பின்னர், ஆட்டோவின் பின்பகுதியில் மயக்கமடைந்த நிலையில் சிறுமி கிடந்ததை கண்டு, அவரை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ இருந்த இடத்துக்கு சென்று பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில், மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த இளைஞன் ஒருவர், “ஆட்டோ உரிமையாளர் எனது நண்பன்; ஆட்டோவை எடுத்துச் செல்லப் போகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதன்போது, சிறுமியின் தந்தையார் “இது தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்துள்ளோம்” என தெரிவித்ததையடுத்து, குறித்த இளைஞன் “எனக்கு பொலிஸ் உயர் அதிகாரி தெரியும்; ஒரு தொலைபேசி அழைப்பு எடுத்தால் உடனே வருவார்” என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இளைஞனை மடக்கிப் பிடித்து தாக்கிய பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் மீட்கப்பட்டதுடன், தப்பியோடி தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபரும் இரவு 11.00 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இதில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என்றும், திருமணமானவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட மற்றொருவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் 15 மற்றும் 16 வயது சிறுமிகளை குறிவைத்து, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து, காதலிப்பதாக நாடகமாடி, பின்னர் தீய பழக்கங்களுக்கு அடிமையாக்கும் இளைஞர் குழுவொன்று இவ்வாறு செயற்பட்டு வருவதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *