யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணியானது வியாழக்கிழமை (01) விடுவிக்கப்பட்டதற்கமைய, தெல்லிப்பளை பிரதேசத்திற்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று(03) மு.ப. 11.30 மணிக்கு நேரடியாக விஜயம் செய்தார்.
அந்த வகையில் வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஓட்டகப்புலம் புனித அமலோற்பவ மாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜே. ஏ. அருள்தாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற பிராத்தனையில் பங்குகொண்டு, அங்கு கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட 20 ஏக்கர் காணியினை பொதுமக்களுடன் சென்று பார்வையிட்டார்.
இதன் போது அப் பிரதேசத்தில் கண்ணிவெடி தொடர்பான பரிசீலனையில் ஈடுபட்டு வரும் ஹலோ டிரஸ்ட் நிறுவனத்துடன் கலந்துரையாடிய அரசாங்க அதிபர், கண்ணிவெடி பரிசீலனையானது எதிர்வரும் புதன்கிழமை (07) நிறைவடைவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும், அதனை அடுத்து வியாழக்கிழமை (08) தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டதன் பின்னர் வெள்ளிக்கிழமை (09) பொதுமக்கள் தமது காணிகளுக்குச் சென்று காணிகளை அடையாளப்படுத்தி தொடர் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மாங்கொல்லை கிராமத்திற்கு (15.13 ஏக்கர் காணி) அரசாங்க அதிபர் விஜயம் செய்தார்.
இவ் அரசாங்க அதிபர் விஜயத்தின் போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சி. சுதீஸ்னர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வீ. சிவகுமார், பாதுகாப்பு படை அதிகாரி, கிராம அலுவலர்கள், அந் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அப் பிரிவுகளுக்குரிய பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


