உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக குழுக்களின் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுடான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் இன்று(03) பி.ப 04.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர், எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் அஞ்சல் வாக்களிப்பு சிறப்பாக நிறைவடைந்துள்ளது எனவும், ஏனைய தேர்தல் ஏற்பாடுகள் பெருமளவில் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் அதற்கு ஒத்துழைப்பு நல்கிய உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், குழுக்களின் கடமைகளுக்காக இணைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் அனைவரும் தேர்தல் பணியாளர்கள் என்ற ரீதியிலேயே ஒருமித்து ஒருங்கிணைந்து சிறப்பாக செயற்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் குழுக்களின் செயற்பாட்டில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது சிறப்பான நேர்த்தியான செயற்பாடுகளை வழங்குவதுடன், சிறப்பான தொடர்பாடல் திறனையும் பேணுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் சுதந்தரமாகவும், சுமூகமாக நடைபெற்றதாகவும் அதற்கு உத்தியோகத்தர்கள் வழங்கிய ஒத்துழைப்பு காத்திரமானது எனவும், அதற்காக தமது நன்றியினையும் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன் பங்குபற்றி கருத்துக்களை முன்வைத்தார்.
மேலும், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு. பொ. தயானந்தனும் கலந்து கொண்டார்.
மேலும், மேலதிக அரசாங்க அதிபரும் (காணி) நலனோம்பல் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.க. ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளரும் களஞ்சிய செயற்பாடு உதவித் தெரிவத்தாட்சி அலுவருமான திரு. எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளரும், மண்டப ஒழுங்கமைப்பு உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. க. திருக்குமார், திட்டமிடல் பணிப்பாளரும் பொது வசதிகள் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. இ. சுரேந்திரநாதன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளரும் கட்டுப்பாட்டுப் பிரிவு உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. எஸ். ரமேஷ்குமார், சமுர்த்தி உதவி ஆணையாளரும் போக்குவரத்து உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. எப். சி. சத்தியசோதி, உதவி மாவட்டச் செயலாளரும் அஞ்சல் மூல வாக்களிப்பு உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான செல்வி உ. தா்சினி, பிரதி பதிவாளர் நாயகமும் முறைப்பாட்டுபிரிவு உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. ப. பிரபாகர் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரும் பணியாட் தொகுதி உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. மா. முரளி ஆகியோர் தமது குழுக்களின் இற்றைவரையான செயற்பாடுகளைத் தெரிவித்தார்கள்.
இக் கலந்துரையாடலில் குழுக்களின் கடமைகளில் ஈடுபட்டுள்ள சகல உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள்.