தென் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட முப்பெரும் விழா அண்மையில் தென் மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் வெலிகம நகர மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக தென்மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் என்.கே.ஆர். பத்திரண, கௌரவ அதிதியாக தென் மாகாணக் கல்விப் பணிப்பாளர் சன்ன உபாலி வீரசேகர, விசேட அதிதிகளாக தென் மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான சந்தமாலி பத்திரண மற்றும் பிரஸான்ஜலீ கமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழ் மொழி தினப் போட்டிகள், முஸ்லிம் கலாசார போட்டிகள், சமூக விஞ்ஞான போட்டிகள் மற்றும் இரண்டாம் மொழிப் போட்டிகள் ஆகியவற்றில் தேசிய மட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கும் வைபமும் தென்மாகாண கல்வித் திணைக்களத்தில் தமிழ் மொழிப் பிரிவுக்குப் பொறுப்பாக பணியாற்றிய பதினொரு முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் 2025 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோரை கௌரவிக்கும் வைபவமும் தென் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழிப் பிரிவினால் வெளியிடப்படும் “வெற்றித் தடம்” எனும் சிறப்பு மலர் வைபவ ரீதியாக வெளியிடுதலும் அன்றைய தினம் இடம்பெற்றது.
இச்சிறப்பு மலரானது தென் மாகாணத்தின் தமிழ் மொழி மூல 46 பாடசாலைகளின் விபரங்களையும், தென் மாகாணப் பாடசாலைகளின் கடந்த ஐந்து வருட கால தேசிய மட்ட பரீட்சைகளில் (தரம் 5 புலமை பரிசில் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை மாணவர்களின் அடைவுகளையும், கௌரவிக்கப்பட்ட பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோரின் விபரங்களையும் நான்கு வகையான போட்டிகளிலும் வெற்றியீட்டிய மாணவர்களின் வர்ணப் புகைப்படங்களையும் அவர்களது ஆக்கங்களையும் உள்ளகத்தே கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இலங்கையின் 4 இனத்தவர்களினதும் மத அனுஷ்டானத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டமை பலரது பாராட்டுக்களைப் பெற்றதோடு தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
தென் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழிப் பிரிவை தற்போதைய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொறுப்பேற்ற பின்னர் கல்வித்துறையில் மாத்திரமின்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் துரித வளர்ச்சியை நோக்கி நகர்வதை அவதானிக்க முடிகின்றது. இம்முறை தேசிய மட்டத்தில நடைபெற்ற இரண்டாம் மொழிப் போட்டிகளில்; தென் மாகாணம் முதலிடத்தையும், கலாசாரப் போட்டிகளில் தென் மாகாணம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை பாராட்டுக்குரிய விடயமாகும்.
750 மாணவர்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்பாரிய விழா தென்மாகாண தமிழ் மொழிப் பிரிவின் ஆசிரிய ஆலோசகர்களினதும், வளவாளர்களினதும் பூரண ஒத்துழைப்புடன் தென் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழிப் பிரிவினால் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

