அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் அஸ்வர் சாலிக்கு எதிராக அக்கட்சியினால் ஒழுக்காற்று விசாரணை இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிக்கை மாதாந்த விசேட அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அறபா வட்டார உறுப்பினர் அஸ்வர் சாலி வரவு செலவுதிட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ளாத மனோநிலையில் வாக்கெடுப்பு இடம்பெற்ற வேளையில் சபையைவிட்டு வெளியேறியிருக்கின்றார்.

இதன்போது, வரவு செலவுத்திட்ட அறிக்கைக்கு ஆதரவாக அஸ்வர் சாலியின் வாக்கு பதிவாகியிருக்கவில்லை.

இந்நிலையில், வாக்கெடுப்பு முடிந்ததன் பின்னர் மீண்டும் சபைக்கு அஸ்வர் சாலி வருகை தந்திருக்கின்றார்.

இதனால் அஸ்வர் சாலியும் வரவு செலவுத்திட்ட அறிக்கைக்கு ஆதரவாக வாக்கினை அளித்ததாக பதிவு செய்யுமாறு தவிசாளரினால் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது.

அதன்படி அமர்வின் கூட்டக்குறிப்பிலும் அவ்விடயம் பதிவாகியிருந்தது.

டிசம்பர் மாத அமர்வு இடம்பெற்றபோது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் எழுந்து நின்று அமர்வுக் கூட்டக்குறிப்பில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சொல்லி, வரவு செலவுத்திட்ட அறிக்கைக்கு ஆதரவான வாக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தனது கருத்தினை முன்வைத்தார்.

இந்த நிலையில் அஸ்வர் சாலியின் வாக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதென சபையில் ஏகமனதாக முடிவானது.

இவ்விடயம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத்தில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சிக்கு எதிரான முகாம்களில் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்த அஸ்வர் சாலி கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போதுதான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் தயவினால் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான நிலையில், பிரதேச சபை உறுப்பினர் அஸ்வர் சாலி வரவு செலவுத்திட்ட அறிக்கைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்த விடயத்திற்காக அவர் மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

இதேவேளை, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்சி நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பங்கு கொள்ளாமல் தொடர்ச்சியாக அஸ்வர் சாலி புறக்கணித்து வருவதாகவும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *