கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழுள்ள சில வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்பினால் கடந்த மூன்று தினங்களாக வைத்தியசாலையில் உள்ள வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை என்பதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகரின் தன்னிச்சையான நடவடிக்கை காரணமாக இடமாற்றம் செய்யக்கோரி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில் இச்செயற்பாட்டுக்கு ஆதரவாக கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய காரியாலயத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்களும் இதற்கு தமது ஆதரவினைத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வைத்தியசாலைகளில் உள்ள வெளிநோயாளர் பிரிவில் தினமும் நன்மை பெற்று வரும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வதுடன் தூர இடங்களில் இருந்து வரும் நோயாளர்கள் கூட வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால் பல அசெகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை காரணமாக காய்ச்சல், டெங்கு மற்றும் தொற்று நோய்கள் அதிகரித்து வரும் நிலையில் ஏழைகளின் உடனடி நிவாரணியாக காணப்படும் அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு தற்காலிகமாக செயலிழந்து வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பதனால் பொதுமக்கள் கடந்த மூன்று நாட்களாக பல சிரமங்களை எதிர்நோக்குவதுடன் தமது அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர்.
இதேவேளை “திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்” மற்றும் “பனங்காடு பிரதேச வைத்தியசாலை பணிப்பாளர்,”களுடன் தொடர்பு கொண்டபோது,
“வைத்திய சங்கத்தினரால் இவ் பணிப்புறக்கணிப்பு இடம்பெறுவதாகவும் கடந்த மூன்று நாட்களாக வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை எனவும் வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப்பிரிவு வழமைபோல் இயங்குகின்றது எனவும் தெரிவித்தனர்.”
அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளரை தொடர்பு கொண்ட போது “கடந்த இரு நாட்களும் இன்று அரைநாளும் வெளிநோயாளர் பிரிவு இயங்கியதாக குறிப்பிட்டார்.”
இதேவேளை வைத்திய அத்தியட்சகரை மாற்றக்கோரி ஆர்பாட்டம் இடம்பெற்ற அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழமைபோல் அனைத்து பிரிவுகளும் இயங்குவதுடன் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளும் வழமை போல் இயங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

