போலி பெண் காவலருக்கு விளக்கமறியல்

பொலிஸ் பரிசோதகர் தரத்திற்கான விளையாட்டு (ஸ்போர்ட்ஸ்) சீருடையை ஒத்த உடை அணிந்து இடுப்பில் துப்பாக்கி வைத்திருந்த நிலையில் பெற்றா (புறக்கோட்டை) பகுதியில் உள்ள ஒரு விடுதி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

குறித்த பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கொழும்பு மத்திய பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று(16) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்படும் போது அவர் தன்னை ஒரு பெண் பொலிஸ் பரிசோதகராக காட்டிக்கொண்டு இடுப்பில் பிஸ்டல் ஒன்றை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் பொலிஸ் அதிகாரி அல்ல என்பதும் அவரிடம் இருந்த துப்பாக்கி மரத்தால் தயாரிக்கப்பட்ட போலியான ஒன்று என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

பொலிஸார் அவரது அடையாளத்தை உறுதி செய்ய கேள்வி எழுப்பியபோது தனது தேசிய அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டதாகக் கூறி அதுகுறித்து பேராதனை பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரின் ரசீதை அவர் வழங்கியுள்ளார். எனினும் மேலதிக சோதனைகளின் போது அவரது வசம் இருந்த தேசிய அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

சந்தேகநபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருவதாகக் கூறி பல நபர்களிடமிருந்து பணம் வசூலித்து குருநாகல் பகுதியில் உள்ள ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரிக்கு வழங்கியிருந்தது தெரியவந்துள்ளது. குறித்த நபர்களை வெளிநாட்டிற்கு அனுப்ப முடியாததால் அவர்களிடமிருந்து ஏற்பட்ட மிரட்டல்களை தவிர்ப்பதற்காக அவர் இவ்வாறு கொழும்புக்கு வந்து ஆடை வர்த்தகத்தில் ஈடுபட்டு மறைவாக வாழ்ந்துவந்ததும் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.

 

எனினும் போலியான பொலிஸ் சீருடையும் போலி துப்பாக்கியும் பயன்படுத்தி ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *